சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நிலவும் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முறையாக கடைப்பிடித்து மற்றும் கடந்த மார்ச் மாதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருப அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு சகல அரசாங்க பாடசாலைகளிலும் இரண்டாவது தவணையை நாளை (ஏப்ரல் 19) முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாடசாலைக்கு மாணவர்களை வரவழைப்பது தொடர்பிலான சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் புதிய பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் வரையில், கடந்த தவணையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அதன்படி, ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 15 இற்கும் குறைவாக இருந்தால் அவ்வனைத்து மாணவர்களும் தினசரி பாடசாலைக்கு அழைக்கப்படலாம். மாணவர்களின் எண்ணிக்கை 16-30 வரையில் காணப்படின் இரண்டு குழுக்களாகவும், 30 இற்கு அதிகமெனில் 3 குழுக்களாக அழைக்கப்பட வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியைப் பாதுகாத்தல், கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல், உணவைப் பகிர்ந்து கொள்ளாது உண்ணல், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மாத்திரம் கொண்டு வருதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அழைப்பதற்கு சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் இதுவரையில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு, எதிர்வரும் காலப்பகுதியிலும் பொறுப்புடன் அதே வகையில் அவர்கள் தமது கடமைகளை புரிவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைவாக நாட்டின் சகல மாணவர்களையும் பாடசாலைக்கு வரவழைத்து நேருக்கு நேர் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும், உலகெங்கிலும் கொவிட் மூன்றாவது அலை உருவாகி வரும் நேரத்தில் நாட்டு மக்களின் பொறுப்பான நடத்தை மற்றும் ஒத்துழைப்பு காரணமாகவே இவ்வாறு பாடசாலைகளைத் திறக்க முடிந்தது எனவும் தெரிவித்த அவர், இருந்த போதிலும் கொவிட் ஆபத்து இன்னும் நாட்டிலிருந்து விலகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் முழுமையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையுடன் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கு நாடென்ற வகையில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் அதனை செயல்படுத்திய செயல்முறையினுள் ஏதேனும் குறைபாடுகள் காணப்படின் அவற்றை விமர்சிப்பதை விடுத்து அது தொடர்பில் விழிப்புணர்வூட்டி குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கான ஒத்துழைப்பினை பெற்றுத் தருமாறு சகல தரப்பினரிடமும் வேண்டிக் கொள்வதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.