க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இன்றிலிருந்து 07 நாட்களுக்குள் அதாவது ஒரு வாரத்திற்குள் வெளியிட முடியுமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கடந்த வருடம் நவம்பர் மாத முதலாம் வாரத்தில் உயர்தரப் பரீட்சை நடாத்தி முடிக்கப்பட்டது. 362,000 மாணவ மாணவியர் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். கடந்த நாட்களில் பரீட்சை விடைத்தாள் திருத்துபவர்கள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உட்பட சகல அதிகாரிகளினது அர்ப்பணிப்பின் காரணமாக இன்னும் ஒரு வார காலப்பகுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடக்கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. கொரோனா தொற்றுநோய் நிலைமை காரணமாக அழகியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் தொடர்பான செய்முறைப் பரீட்சைகளை பிற்போட வேண்டி ஏற்பட்டது. பல பரீட்சாத்திகள் கொரோனா தொற்றாளர்களானமையே இதற்கான காரணம். எவ்வாறெனினும் இவ்வனைத்தையும் செயற்றிறன் மிக்க வகையில் நிறைவேற்றித் தந்த அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகின்றது. இதன் காரணமாக ஒரு வருடத்தினை வீணடிக்காமல் இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு எமது பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் கொடூரமாக தாக்கியுள்ள இவ்வாறான சூழ்நிலையில் இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள எம்மால் முடிந்ததையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன். அதேநேரத்தில் நாடு முழுவதும் மே மாதம் 10 ஆம் திகதி பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். அதுவரையில் இணையவழி மூலமாக விரிவுரைகள் இடம்பெறும்.
எமக்கு தெரியும் வாழ்க்கையில் எவ்வாறான நஷ்டங்கள் ஏற்பட்ட போதிலும் அதனை ஈடுசெய்து கொள்ள முடியும் என்பது. ஆனால் பிள்ளைக்கான கல்வி கிடைக்காமல் போனால் அது நிறைவேற்றிக் கொள்ள முடியாத குறையாகும். வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் அத்துடன் மேலதிக நேர வகுப்புகள் என அனைத்தையும் நடாத்தமல் இருப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் நாம் அன்றாடம் மீளாய்வு செய்து வருகின்றோம். தொடர்ச்சியாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அனைவருடனும் அன்றாடம் தொடர்பு கொண்டு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைகளுக்கமைவாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வனைத்தையும் கவனத்திற் கொண்டு அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றிய இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது மே மாதம் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்படும், எனவும் அவர் தெரிவித்தார்.
Thursday, 29 April 2021
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்