மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தரம் 05, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கு மாத்திரமே என்பதுடன் ஏனைய வகுப்புகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது ஏப்ரல் விடுமுறையின் பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதியாகும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கல்வி அமைச்சில் 2021.03.09 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான பரிந்துரைகள் இன்று எமக்கு கிடைத்துள்ளது. அதன்ப படி கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனையாக இருப்பது எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது மார்ச் 15 ஆம் திகதி மேல் மாகாணத்தில் பாடசாலைகளில் ஆரம்பிக்க வேண்டியது தரம் 05, 11 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கு மாத்திரமேயாகும். ஏனைய வகுப்புகள் ஆரம்பிக்கப்படுவது ஏப்ரல் விடுமுறையின் பின்னராகும். எனவே ஏனைய வகுப்புகளுக்காக பாடசாலைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
தரம் 01ற்கான மாணவர்கள் ஏற்கனவே பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆயினும் அவர்களுக்கான வகுப்புகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மேற்படி வகுப்புகளையும் உள்ளடக்கியதாக ஏனைய சகல வகுப்புகளையும் அந்த வகையில் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதுவிதமான சிக்கலும் இல்லை. எனவே மார்ச் 15 ஆம் திகதி மேல் மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சகல பாடசாலைகளின் சகல வகுப்புகளையும் ஆரம்பிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.