- கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகப் பொறுமதியான காலத்தினை வீணடிக்காமல் தமது செயற்பாடுகளை முன்னகர்த்தி செல்வதற்கு அவசியமான வசதிகள் மற்றும் கல்விச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சானது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனவே இதற்காகவே 2021/03/15 ஆம் திகதி அதாவது எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டின் சகல பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் பின்னர் மேல்மாகாணத்தின் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021.03.08 ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
நாட்டின் சகல பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டன. ஆயினும் மேல்மாகாணத்தின் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான பரிந்துரைகளை நாம் சுகாதாரத் துறையினரிடம் கோரியுள்ளோம். சுகாதாரத் துறை அதிகாரிகளின் மேற்பார்வையின் பின்னர் சுமார் இரண்டு நாட்களுள் அதற்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். எனவே சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகத்தின் அனுமதியை நாம் கோரியுள்ளோம். இரண்டு நாட்களுக்குள் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அது இன்னும் இரண்டு நாட்களில் அதாவது மார்ச் 10 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. இம்முறை 622,000 மாணவர்கள் மேற்படி பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதே வகையில் க.பொ.த. உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றினையும் வெற்றிகரமாக எம்மால் நடாத்தி முடிக்க முடிந்தது. இது தொடர்பில் எதிர்மறையான மற்றும் அவநம்பிக்கையுடனான கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு நாம் செவி சாய்த்திருந்தால் இப்பரீட்சைகளை எம்மால் நடாத்தி முடித்திருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. நாட்டு மக்கள் எம்மிடம் எதிர்பார்த்த அத்துடன் எதிர்பார்க்கின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்திற் கொண்டே அரசாங்கமானது இக்கட்டான சூழ்நிலையிலும் கூட தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொண்டது. எனவே இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நமது மற்றும் நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு எமது அதிகாரிகள் மற்றும் சகல தரப்பிரனதும் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது.
பரீட்சையை நடாத்திய காலப்பகுதியில் அதாவது கடந்த 09 நாட்களில் நோய்த்தாக்கம் கொண்ட 56 பிள்ளைகள் பரீட்சையை எழுதினார்கள். அவர்களை விசேட பரீட்சை நிலையங்களில் அமர்த்தி பரீட்சையில் தோற்றுவிக்க வைக்க எம்மால் முடிந்தது. அவ்வாறான 40 பரீட்சை நிலையங்களை நாம் ஏற்பாடு செய்திருந்தோம். சகல பரீட்சை நிலையங்களிலும் விசேட வகுப்பறையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட 321 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றினார்கள். அரசாங்கம் என்ற வகையிலும் அமைச்சு என்ற வகையிலும் நாம் தொலைநோக்குடனேயே இவ்வனைத்து விடயங்களையும் திட்டமிட்டு மேற்கொண்டோம் என்றே கூற வேண்டும். முதல் மூன்று நாட்களுக்கான பரீட்சை வினாப்பத்திர மதிப்பீட்டுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ‘ஜூன் மாதத்தில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவும் ‘ஜூலை’ மாதத்தில் க.பொ.த. உயர் தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்குமே நாம் இவ்வனைத்தையும் செய்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.