கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
தொலைக்கல்வி என்பது எந்தவகையிலும் வகுப்பறைக் கற்றலுக்கான மாற்றுவழியல்ல. ஆயினும் தொலைக்கல்வியினூடாக ஏற்பட்டுள்ள மனப்பாங்கு ரீதியான மாற்றம் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். டிஜிட்டல் நூலகமும் இதனுடன் இணைக்கப்படுவது மிகவும் அத்தியாவசியமானது என தாம் கருதுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021.02.17 ஆம் திகதி தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் நடைபெற்ற ‘டிஜிட்டல் நூலகம்’ மற்றும் அதன் இணையதள ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
வாழ்க்கையில் எவ்வகையான துயரங்கள் நேர்ந்த போதிலும் அவற்றிலிருந்து நேர்மறை சிந்தனைகளை அடையாளம் காண்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால் கொவிட் 19 என்பது அவ்வாறு நேர்மறை சிந்தனை என்ற ஒன்றை அடையாளம் காண்பதில் கடினமானதும் முடியாததுமான ஒரு நெருக்கடியாகும். மறைமுகமாகவேணும் அதிலிருந்து பலன்களைப் பெறுவதற்கு நாம் முயற்சிப்பது பயனுள்ளதாக அமையும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது. நாம் எந்தவிதத்திலும் எதிர்பாராத வகையில் தாக்கத்தினை ஏற்படுத்திய கொவிட் 19 நெருக்கடிக்கு மத்தியில் ‘தொலைக்கல்வி’ என்ற விடயத்தினை நாம் கையாள ஆரம்பித்தோம். நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்த வகையில் கல்வியை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுத்தமையானது உண்மையில் வரவேற்கத்தக்கதும் பயன்மிக்கதும் என்பதனை நாம் அறிவோம்.
எனினும் மேற்படி அனுபவத்தின் மூலம் நாம் கண்ட ஒரு விடயமே, வகுப்பறையினுள் ஆசிரியர் மாணவருக்கிடையிலான தொடர்பு எந்தளவு பெறுமதி வாய்ந்தது என்பது. பௌதீக ரீதியான அந்தத் தொடர்பு மிகவும் அவசியமானது. எனவே இந்த தொலைக்கல்வி முறைமையினை எந்தவகையிலும் மாற்றுவழியாக நாம் காண முடியாது. எனினும் யாதேனும் சந்தர்ப்பத்தில் அவ்வாறான பௌதீக ரீதியான தொடர்பினை மேற்கொள்ள முடியாத நிலைமையில் அதற்கு மாற்று வழியொன்று அவசியம் இருத்தல் வேண்டும். தொலைக்கல்வியில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் காரணமாக யாவரும் இதனை சமமாக அனுபவிக்கும் சந்தர்ப்பம் இல்லை என்பதையும் நாம் அறிவோம். ஆயினும் கொவிட் 19 காரணமாக பெற்றோர், ஆசிரியர், மாணவ மாணவியர் என்ற தரப்பினர் தொலைக்கல்வி தொடர்பில் அதற்கு முன்பு சிந்திக்காத விதமாக சிந்திப்பதற்கு பழக்கப்பட்டனர்.
இந்நாட்களில் எமது பல்கலைக்கழகங்களில் தொலைக்கல்வி முறைமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அது நிரூபிக்கப்பட்டும் உள்ளது. எனவே இப்பாரிய மனப்பாங்கு ரீதியான மாற்றம் எமது கல்வி மற்றும் கல்வி கட்டமைப்பு தொடர்பில் சிந்திக்கும் முறைமையில் மாற்றம் நிறைந்த ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலைமையின் கீழ் கல்வி நடவடிக்கைளை தொடர்ச்சியாக பேணிச்செல்லும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் அதனை ஒரு மாற்றுவழி என ஒருபோதும் நான் காண்பதில்லை. அதுவோர் உறுதுணைச் செயற்பாடு மாத்திரமே.
நிறுவனங்கள் பல ஒன்றிணைந்து செயற்படுத்தும் இந்த ‘டிஜிட்டல் நூலகம்’ கூட இன்றைய நிலைமையில் எமது சமூகத்திற்கு மிகவும் அவசியமானது. அறிவு சார்ந்த விடயங்களை பெற்றுக் கொள்வதற்கு நூலகத்திற்கு நேரடியாக செல்லாது இணையதளத்தினூடாக நூலகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இதன் மூலமாக வழங்கப்படுகின்றது. எனினும் எந்தளவு ஈ-நூல்கள் காணப்பட்ட போதிலும் நேரடியாக நூலைக் கையிலெடுத்து வாசிக்கும் அந்த உணர்வு மிக நெருக்கமானது. பக்கங்களைப் புரட்டி வாசிப்பதும், அதன் பக்கங்களை கைவிரல்களால் தடவி நூலுடன் இணையும் நெருக்கம் ஈ-நூலில் கிடைப்பது அரிது. அதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன. நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிடாதிபதியாகவும் துணைவேந்தராகவும் பணியாற்றிய காலப்பகுதிகளில் ஆசிய மன்றத்துடன் இணைந்து மாணவர்களது வாசிப்பினை அதிகரிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நூலக மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். எனவே இது பற்றியதான தெளிவு எனக்கு உள்ளது.
வளர்ந்து வரும் மாணவர் மனங்களில் அறிவு சார்ந்த தாகம் ஏற்பட வேண்டும். அதுவே சிறந்த கல்வி முறைமையின் அடித்தளமாகும். வாசித்தல் – எழுதுதல் ஆகிய இரண்டிற்குமிடையில் பரஸ்பர தொடர்பு நிலவுகிறது. எமது பிள்ளைகள் 42000 சிறு கையேடுகளை எழுதியுள்ளனர். அதிலிருந்து 100 கையேடுகளை தெரிவு செய்து அவற்றை அச்சிடுவதோடு மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் மற்றும் எழுதும் பழக்கத்தினை ஊக்குவிப்பதற்கே எமது அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. இவை அனைத்தையும் அரசாங்கம் தனித்து மேற்கொள்வதென்பது இலகுவான காரியமன்று. இவ்விடயம் தொடர்பில் இந்த நான்கு நிறுவனங்களும் தனித்துவமான பணியினை மேற்கொண்டுள்ளன. அதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சு எப்போதும் தயாராகவே உள்ளதென தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்விற்கு தேசிய நூலகத்தின் தலைவர் சொனால குணவர்தன, ஆசிய மன்றத்திற்கான இலங்கைப் பிரதிநிதி தினேஷா த சில்வா, தேசிய நூலகத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ. சுனில், குளோபல் அக்கடமிக் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சம்பத் அபேவிக்கிரம உட்பட பல அதிதிகள் பங்குபற்றியிருந்தனர்.