காலதாமதமின்றி பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்யக் கூடிய கட்டமைப்பொன்றினை உருவாக்குவது கல்வி அமைச்சின் பிரதான பணியெனக் கருதி செயற்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பரீட்சை நிலையங்களின் தயார் நிலை தொடர்பில் ஆராயும் பொருட்டு குருநாகல் மலியதேவ மாதிரி கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாளை (01) முதல் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை ஆறு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் (622,000) மாணவர்கள் தோற்றுகின்ற அதேவேளை நாடு முழுவதும் 4,513 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடை பெறுகின்றது.
மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டு, விசேடமாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் முழுமையான ஒத்துழைப்புடன் பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும், பரீட்சை நிலையங்களின் கண்காணிப்பின் போது திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் சகல நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாக இடம்பெறுவதனை உறுதி செய்ய முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய கொவிட் சூழ்நிலையில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் அவசர நிலைமை ஏற்படின், அதற்கான முன்னேற்பாடாக நாற்பது விசேட பரீட்சை நிலையங்கள் நாடு முழுவதும் தாபிக்கப்பட்டுள்ளதெனவும் அதற்கென கல்வி அமைச்சானது 500 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொடுத்துள்ளதெனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், பரீட்சையை வெற்றிகரமாக நடாத்துவதற்கு ஆசிரியர்கள், அதிபர்கள், ஏனைய அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு, சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறைசார் தரப்பினரிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு தொடர்பில் தமது நன்றிகளையும் தெரிவித்தார்.
இம்முறை சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடுவதெனவும், அவர்களுக்கான உயர் தர வகுப்புகளை ஜூலை மாதத்தில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், எக்காரணம் கொண்டும் பிள்ளைகளின் கற்றலுக்கான காலத்தினை வீண்விரயம் செய்வதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.
கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அதன் படி, உயர் தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தற்போது காணப்படுகின்ற ஒன்றரை வருட கால இடைவெளியை நிச்சயமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ள உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை பெறுகின்ற மாணவர்களை செப்டம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வதற்கான சகல ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குருநாகல் மலியதேவ மாதிரி கல்லூரியில் நான்கு சாதாரண தர பரீட்சை மண்டபங்கள் நிறுவப்பட்டுள்ள அதேவேளை அதற்கான கண்காணிப்பு விஜயத்தின் நிறைவின் பின்னர் மேற்படி மண்டபங்களின் பரீட்சை மேற்பார்வையாளர்களுடன் நடைபெற்ற சுமூகமான கலந்துரையாடலிலும் இணைந்து கொண்ட அமைச்சர், பரீட்சையை நடாத்துவது தொடர்பில் அவர்களது கருத்துக்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்தார். மேற்படி நிகழ்விற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர உட்பட கல்வி சார் அதிகாரிகள் பலரும் பங்குபற்ற இருந்தனர்.