கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையின் கீழ் நிலவும் அவதானமிக்க நிலைமை மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற் கொள்ளாது சில பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்துதல் மற்றும் அதற்கு இணையான ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தற்போது உருவாகியுள்ள சூழ்நிலையில் பிள்ளைகள் உட்பட ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்தினது சுகாதார பாதுகாப்பு பற்றியதான கூடுதல் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டிய காலப்பகுதி எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.
அதன்படி பாடசாலைகளில் நடாத்தப்படவிருந்த அனைத்து நிகழ்வுகளையும் மீள அறிவிக்கும் வரையில் நிறுத்துமாறு குறிப்பிட்டு கல்வி அமைச்சின் செயலாளர் சகல மாகாண, வலய, கோட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் பிரிவெனாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தற்போது எதேனும் பாடசாலையில் விசேட நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அவ்வனைத்து நிகழ்வுகளும், எதிர்காலத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகளும் மீள அறிவிக்கும் வரையில் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி கடிதம் மூலமாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.