தற்போது மேல்மாகாணத்தின் பாடசாலைகள் எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக ஏனைய வகுப்புகளையும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக மேல் மாகாணத்தின் ஒவ்வொரு பாடசாலையாக ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற விதம், இணையவழிக் கல்விச் செயற்பாடுகளின் முன்னேற்றம், சுகாதார ஆலோசனைகளின் மேம்பாடு தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயம், நாலந்தா கல்லூரி உட்பட பல பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (29) மேற்கொண்ட மேற்பார்வை விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெரும் ஆர்வத்துடனும் மிக அர்ப்பணிப்புடனும் திட்டமிட்ட வகையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்படி வேலைத்திட்டத்துடன் இணைந்துள்ளதோடு, பெற்றோர்களுடனும் முறையான ஒருங்கிணைப்பினைப் பேணியதாக சிறந்த திட்டமிடலின் கீழ் இந்த செயற்பாட்டினை வெற்றி கொள்ளவைக்கும் முகமாக பெற்றுத் தருகின்ற ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் தமது நன்றிகளை இதன் போது தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் பிள்ளைகளுடன் அன்றாடம் நெருங்கிப் பழகுகின்ற தரப்பினர்கள் என்ற வகையில் கொவிட் தடுப்பூசி வழங்குகின்ற போது எமது ஆசிரிய குழாத்தினருக்கு முன்னுரிமை அளிப்பதென்பது நியாயமானதொரு விடயமாக இருக்கும் எனவும் அது தொடர்பில் கல்வி அமைச்சர் என்ற வகையில் தாம் அரசாங்கத்திடம் வேண்டுகோளை முனவைப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளுள் மேல்மாகாணத்தின் பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் காணப்படுகின்ற பாதிப்பு மிக்க சூழ்நிலை காரணமாக இம்மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆயினும் அவதானமிக்க நிலைமையின் கீழ் பிள்ளைகளின் ஒட்டுமொத்த எதிர்காலத்தினையும் பாதிக்கும் நிலைக்கு தள்ளிவிட முடியாது. பொறுப்பு மிக்க ஓர் அரசாங்கம் என்ற வகையில் அந்த பொறுப்பிலிருந்து விலகி நிற்பதற்கு நாம் தயாரில்லை என்ற காரணத்தினால் அனைத்துவித சவால்களுக்கு மத்தியிலும் புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம். ஏனைய பிரதேசங்களில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். சவால்களை வெற்றி கொண்டு மேற்படி நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக மேற்கொள்வதற்கு எம்மிடம் ஆற்றல் இருந்தது”, என்றவாறு தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க சூழ்நிலையில் ஆசிரியர்கள் ஆற்றுகின்ற பணி தொடர்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த அமைச்சர், பிள்ளைகளினது கல்வி பாதிக்கப்பட்டால் வேறு விடயங்களைப் போல ஈடு செய்துகொள்ள முடியாது எனவும், நாட்டில் பாதிப்பான சூழல் காணப்படிகின்ற போதிலும் பாடசாலைகளை தொடர்ச்சியாக மூடி வைப்பது சாத்தியமற்ற விடயம் எனவும், சுகாதார, போக்குவரத்து, பாதுகாப்பு உட்பட சகல துறையினரதும் முழுமையான ஒத்துழைப்பின் கீழ் ஒட்டுமொத்த செயற்பாட்டினையும் வெற்றிகரமாக மீள யதார்த்த நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதில் தமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பாடசாலைகளுக்கு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும், சுற்றுநிருபங்களில் சிக்கல்கள் காணப்படின் அது தொடர்பில் கல்வி அமைச்சிற்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இதன் காரணமாக பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கக் கூடிய பாடசாலைகள் யாவை என்பது தொடர்பிலும் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்து பாடசாலைகளை நடாத்திச் செல்வது தொடர்பில் அந்தந்த பாடசாலைகளுக்கு அவசியமான வசதிகள் மற்றும் நிதி ஏற்பாடுகள் ஆகியவற்றினை பெற்றுக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கும் அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிறு பிள்ளைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போது சமூக இடைவெளியை பாதுகாப்பது தொடர்பான விடயம் சிக்கலான காரணியாக காணப்பட்ட போதிலும் முன்பள்ளிகளை மூடி வைத்திருப்பதென்பது பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். அத்துடன் மேல் மாகாணத்தில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளை ஆரம்பிப்பதில் நிலவும் நடைமுறைச் சாத்தியப்பாடு தொடர்பிலும் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் வெகு விரைவில் மேற்படி தரங்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்விற்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா அவர்கள், அமைச்சின் பிரத்தியேக செயலாளர் நலின் கம்லத் அவர்கள் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.