கூடியளவு விரைவாக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் தற்போதைய அரசாங்கம் திடமான உறுதியுடன் இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2020.12.20 ஆம் திகதி பன்னிபிட்டிய ஸ்ரீ தர்மவிஜயாலோக விகாரையின் சியாமோபாலி வங்ஸ மகா பீடத்தின் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரோ அவர்களை சந்தித்ததன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை மிக விரைவில் பெற்றுக் கொடுக்க எம்மால் முடியும். சிலவேளை நாளைய தினத்தில் கூட, இது தொடர்பில் கௌரவ மகாநாயக்க தேரோ அவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காகவே நான் இங்கு வருகை தந்தேன், மிக விரைவில் பாடசாலைகளை மீளத் திறந்து பிள்ளைகளினது கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டுமென்பதாகவே மகாநாயக்க தேரரினதும் கருத்தாக இருந்தது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்கள் பெற்றுத் தரும் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பாடசாலைகளை திறப்பது மிகப் பொருத்தமாக அமையும் என தேரர் தெரிவித்தார்.
நாட்டின் சகல பாடசாலைகளையும் ஒரே தடவையில் திறப்பது முடியாத விடயமாக இருக்கின்ற போதிலும் அதனை கட்டம் கட்டமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் சகல விடயங்களும் யதார்த்த நிலைக்கு மாற்றம் அடைந்து வருகின்றன. கொவிட் 19இன் தாக்கமானது நமது நாட்டிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் யாவற்றிலும் இது சவாலாகவே காணப்படுகின்றது. அரசாங்கம் என்ற வகையிலும் நாடென்ற வகையிலும் நாம் இந்த சவாலை வெற்றி கொள்ள வேண்டும். எமது பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துதல் வேண்டும். பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதும் அந்தந்த பாடசாலைகளுக்கு, அதிபர்களுக்கு மற்றும் குழுக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பிலும், அந்தந்த சுகாதார ஆலோசனைகளுக்கமைவாக செயற்படும் அதிகாரத்தினை பாடசாலைகளுக்கு வழங்குவது தொடர்பிலும் நாம் கலந்துரையாடி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு-
“ஆம் எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தெரிவித்தார், எம்.சீ.சீ. ஒப்பந்தத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு நேரடியான கொள்கையொன்றினை நடைமுறைப்படுத்துவதாக. அவர் கூறியவாறே நடந்து கொண்டார். எம்.சீ.சீ. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடுகள் பலவற்றில் மக்கள் கூலித் தொழிலாளர்களாக மாறியிருப்பதனை நாம் இப்போது காண்கின்றோம். அப்படியொரு பாதிப்பு இருப்பதனை உணர்ந்த காரணத்தாலேயே அவர் எம்.சீ.சீ. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாத காரணங்களாக மிகத் தெளிவாக தெரிவித்தார். யார் என்ன சொன்னாலும் அரசாங்கம் யாருக்கும் தெரியாமலேனும் எம்.சீ.சீ. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் என்றே இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவித்து வந்தது. அதனை இரத்து செய்தாலும் வேறேதும் முறைமையில் அந்த விடயங்களை நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவிப்பார்கள் என்று இப்போது கூறுகின்றனர். நாங்கள் அரசாங்கம் என்ற வகையிலும் நாட்டின் தலைவராக ஜனாதிபதியும் உறுதியான முடிவுடன் இருக்கின்றோம் என்பதனை மிகத் தெளிவாக கூற முடியும்” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.