எமது நாட்டின் தொழில்நுட்பம், தொழில் கல்வி மற்றும் பயிற்சி (TVET)த் துறைகளில் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவித்தல் உள்ளிட்ட கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் திறன் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மாண்புமிகு ராஜாங்க அமைச்சர் சீத்தா அரம்பேபொல, கல்விச் செயலாளர் கே. கே. சி .கே பெரேரா உட்பட சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நேற்று (24 திகதி) கல்வி அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கைக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், எமது நாட்டின் கல்விப் புலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகள் பற்றி சுட்டிக்காட்டப்படுமானால் எதிர்காலத்தில் அத்துறைகளின் அபிவிருத்திக்காக ஒத்துழைப்பு வழங்க முடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இலங்கையின் தொழில் சந்தைக்கும் தொழில் கல்விக்கும் இடையில் பொருத்தப்பாடு இன்மை காணப்படுவதாகவும், இதனை மாற்றியமைக்க வேண்டும் எனவும், தற்போது தொழில்சார் கல்வியை வழங்குவதில் அனேகமான நிறுவனங்களில் காணப்படும் பாரம்பரிய கற்றல் வழிமுறைகளுக்குப் பதிலாக மாணவர்களுக்கு ஊக்கியாக அமையக்கூடிய கற்றல் வழிமுறைகளை நோக்கி நகர வேண்டிய தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் அறிவியலாளர்களை உருவாக்கும் பொருட்டு பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி (TOT) அளித்தல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையில் நட்புறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்கும், தொழில் கல்வி அத்துடன் தொழில்நுட்ப விடயப் பரப்பு தொடர்பான ஒன்லைன் கற்கைநெறிகளை விரிவான மட்டத்தில் அறிமுகம் செய்வதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.