கல்வி அமைச்சின் செயலாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் கே.கே.சீ.கே பெரேரா நேற்றைய தினம் (17) கல்வி அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மொரட்டுவை பல்கலைகழகத்தின் துணைவேந்தராக சேவையாற்றியுள்ள பேராசிரியர் கே.கே.சீ.கே பெரேரா அதற்கு முன்னதாக அப்பல்கலைகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளதோடு பல்கலைக்கழகத்தின் நிருவாக மற்றும் கொள்கையாக்கம், கல்வி நிருவாகம் மற்றும் பல்கலைக்கழக தரப்படுத்தல், திணைக்களங்களின் தர உறுதிப்பாடு , பணியாட்டொகுதி அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முன்னிலை வகித்து செயற்பட்டுள்ளார்.
மேலும், எரிசக்தி தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல்,வெப்ப இயக்கவியல் கோட்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான பட்டதாரி மாணவர் கற்கை நெறிகள், பட்டக் கற்கை நெறிகள் மற்றும் பட்டபின்படிப்பு கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ள அவர், 1986 ஆம் ஆண்டில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்து அதை தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார். மேலும், பேராசிரியர் பெரேரா மோட்டார் வாகன பொறியியற் நிறுவனம், பொறியியற் நிறுவனம், இலங்கை எரிசக்தி முகாமையாளர்களின் சங்கம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உறுப்புரிமையை பெற்று செயற்பட்டுள்ளார்.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட உள்ளிட்ட கல்வி அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.