செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்விச் சீர்திருத்தமானது கல்விக் கட்டமைப்பின் கூட்டு முயற்சி
அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்த செயற்பாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அதற்கு இணையாக இடம்பெறும் பாடசாலை காலப்பகுதியை 30 நிமிடங்களால் நீடிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொது மக்களைத் தெளிவூட்டும் குறிக்கோளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று இன்று (06) நாலக்க களுவெவ (கல்விச் செயலாளர்) அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய அவர், புதிய கல்வி மாற்றமானது மாற்றத்தை உருவாக்குவதற்கான ஆரம்பத்தை முன்னிலைப்படுத்தியதாக 2026ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ளதோடு இப்புதிய கல்வி மாற்றத்திற்காக பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் தேசிய கல்வி நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான பணிகள் சுமார் 99% நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தரம் 1 மற்றும் 6 ஆகியவற்றுக்குரிய ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் 2025.12.31 ஆம் திகதிக்குள் நிறைவடையும் எனவும் இந்த இரண்டு தரங்களுக்கும் ஒரு தவணைக்குத் தேவையான 106 மொடியுள்கள் அடுத்தவரும் இரண்டு வாரங்களுக்குள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
சமூகத்தில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீட்டிப்பது தரம் 5 முதல் மேல் வகுப்புகளுக்கும் செயற்படுத்தப்படும் எனத் தெரிவித்த செயலாளர், இது புதிய கல்விச் சீர்திருத்தத்தினுள் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்விச் செயன்முறை செயற்படுத்தப்படவுள்ளதால், ஒரு பாடநேரத்தை 50 நிமிடங்கள் என மாற்றியமைப்பது ஒட்டுமொத்த செயன்முறையின் பெறுபேறாக அமைகின்றதெனவும், இதற்கு இணையாக ரயில்கள் மற்றும் இ.போ.ச. பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளின் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ரயில்வே திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்துச் சபை போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மாற்றம் தொடர்பில் 09 மாகாணங்களை உள்ளடக்கியதாக சகல கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களைத் தெளிவூட்டும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், அவை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக பெற்றோர்களைத் தெளிவூட்டும் தொடர் கூட்டங்கள் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆகியோர், இந்த பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் போது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் கல்வி முறைமைகள் தொடர்பில் விரிவான அவதானிப்புகளை மேற்கொண்டதாகவும், அவை பிள்ளைகளின் மனதிற்கு ஏற்ற வகையிலும் எதிர்கால வேலை உலகிற்கு அவசியமான வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தத்தின் போது தரம் 10 தொடக்கம் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதற்கான அடிப்படை அடித்தளம் இடப்படும் என்றும், அதனை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் க.பொ.த உயர்தர பாடத் துறையிலும் அந்தக் கல்வியைத் தொடரக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீட்டிப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு. நாலக்க களுவெவ, நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து முன்னேறும் உலகத்திற்கு பொருத்தமான ஒரு பிள்ளையை சமூகமயப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இப்புதிய கல்வி மாற்றத்திற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், பிரதிப் பணிப்பாளர் நாயகம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
ஊடக அலகு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின்

















