கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தின் மாணவ மாணவிகளின் வதிவிடப் பயிற்சிகள் தாமதமடைவதைத் தவிர்த்தல், விடுதி முகாமைத்துவம், வளப்பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை முன்வைப்பதற்கும், அது தொடர்பிலான அடுத்தகட்ட கலந்துரையாடல்களை நடாத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள் தெரிவித்தார்.
2025.08.12ஆம் திகதி கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தின் மாணவர் பிரதிநிதிகள் குழுவுடன் கொழும்பு 07, வோர்ட் பிரதேசம், உயர் கல்விப் பிரிவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
மாணவர்களின் வதிவிடப் பயிற்சியை தாமதமின்றி மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறது. அதேவேளை, தற்போது பொரல்லை சுதேச மருத்துவ பீடத்திற்குரியதான விடுதி சரியான வகையில் முகாமைத்துவம் செய்யப்படாமை, விடுதி உரிய முறையில் பராமரிப்பு செய்யப்படாமை, விடுதியில் இருக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நலனோம்புகை பிரச்சினைகள் மற்றும் விடுதி வசதிகளை வழங்கக் கூடிய நிலைமை இருக்கின்ற போதிலும் வாடகை விடுதிகளுக்காக அதிகளவு பணம் செலவிடப்படுவது போன்ற பல பிரச்சினைகளை மாணவர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பீடத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி அவசியமான ஆலோசனைகளை வழங்க எம்மால் முடிந்தது. இது தொடர்பாக மேலும் தலையீடு செய்வதன் மூலம் மாணவர்களின் நலனோம்புகை மற்றும் ஏனைய பிரச்சினைகளையும் மிக விரைவில் எம்மால் தீர்க்க முடியும்.
அதிகரித்து வரும் மாணவர் பதிவுகளுக்கு அமைவாக பௌதீக மற்றும் மனித வள மேம்பாட்டின் அவசியத்தை மாணவர்கள் சுட்டிக் காட்டியதோடு குறுகிய காலத்தில் அரசாங்கத் தரப்பிலிருந்து அதற்கான தீர்வுகளை நாம் முன்வைக்க முடியும். குறிப்பாக ஆய்வுகூட வசதிகள், நூலக வசதிகள், கற்றல் மண்டப வசதிகள், உணவக வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தலையீட்டினைச் செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கு மேலதிகமாக பாடத்திட்டத்தில் காணப்படுகின்ற சிக்கல் நிலைமைகள், மருத்துவப் பயிற்சி தொடர்பான சிக்கல்கள் மற்றும் வதிவிட மருத்துவப் பயிற்சி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பீடத்தின் பிரதிநிதிகள் , மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை நடாத்த நாம் எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக ஒரு விரிவான கலந்துரையாடல் கண்டிப்பாக அவசியம். எனவே, எதிர்காலத்தில் அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களால் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.




