சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஜனாதிபதி அநுரவினதோ அல்லது பிரதமர் ஹரினியினதோ சீர்திருத்தம் அல்ல.
சகலரும் தெளிவுடன் பெற்றுக் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளுக்கமைய சாதகமான மாற்றங்களை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக ஒற்றுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஜனாதிபதி அநுரவினதோ அல்லது பிரதமர் ஹரினியினதோ சீர்திருத்தம் அல்ல, சகலரும் தெளிவுடன் பெற்றுக் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளுக்கமைய சாதகமான மாற்றங்களை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக ஒற்றுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் வட மாகாண பிரதம செயலாளரின் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (02) இடம்பெற்ற தெளிவூட்டல் நிகழ்வில் உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நிலவும் கல்வி முறைமையினுள் முதலாம் தரத்திற்கு சேர்க்கப்படும் பிள்ளை தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வது, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனோ அல்லது மகிழ்ச்சியுடனோ அல்ல. பிள்ளைகளுக்கு நட்பு ரீதியான பாடசாலைச் சூழல் மற்றும் கற்றல் முறைமையை உருவாக்குதல் வேண்டும். பாடசாலையிலிருந்து வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் போன்று முயற்சியாளர்களும் கலைஞர்களும் தொழிற்றுறை நிபுணர்களும் உள்ளிட்ட சகல தொழிற்றுறை சார்ந்த தரப்பினரும் பாடசாலையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஒரு மாகாணமோ ஒரு மாவட்டமோ அல்லது ஒரு வலயமோ மாத்திரமன்றி சகல மாகாணங்களும், மாவட்டங்களும், வலயங்களும் முக்கியமானவை. சமத்துவம் அங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. எமது நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் சமமான சந்தர்ப்பங்களைப் பெற்றுக கொடுக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு அவசியமெனில், சகல வளங்களையும் ஒரு வலயத்திற்கு, ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் ஈடுபடுத்த முடியாது. அது நியாயமான வகையில் பகிரப்படுதல் வேண்டும்.

அதன்போது கடினமான மற்றும் பற்றாக்குறையுடைய பிரதேசங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதைப் போன்றே பாடசாலைகளுக்கு டிஜிட்டல் வசதிகள், கற்பதற்கு வசதியான வகுப்பறைகள், துப்பரவேற்பாட்டு வசதிகள், நீர், விளையாட்டு மைதானங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள், புத்தாக்கத்திற்கான சூழமைவுகள், அழகியல் அலகுகள் உள்ளிட்ட சகலதும் பாடசாலைகளில் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும்.

அதற்கான சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. அதேவேளை, கணிப்பீடு மற்றும் மதிப்பீடு ஆகியனவும் மிகவும் முக்கியமானவை. பிள்ளைக்கு அவசியமான சிறுவர் நேய கற்றல் முறைமை, கற்றல் மற்றும் கற்பித்தல் சூழல் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுத்து சமூகத்திற்கு பொறுப்புக் கூறும் ஒரு பிரஜை​யை பாடசாலையிலிருந்து உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது.

அதற்காகவே நாம் இந்த மக்கள் விவாதங்களை, இவ்வாறான கலந்துரையாடல்களை நடாத்துகின்றோம். ஏனெனில் இது கல்வி அமைச்சினதோ அல்லது ஹரினி அமரசூரியவினதோ அல்லது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின ​ சீர்திருத்தம் அல்ல. இது இலங்கையின் தேசிய கல்விச் சீரமைப்பாகும். எம் அனைவரிடத்திலும் இதைப் பற்றிய கருத்து இருக்க வேண்டும். நாம் அனைவரும் இதில் பங்குகொள்ள வேண்டும்.

இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஏனெனில் இதனை நாம் கட்டம் கட்டமாகவே நகர்த்தவுள்ளோம். அனைத்தையும் தயார் செய்துகொண்டு இந்த சீரமைப்பினை ஆரம்பிக்கச் சென்றால் நாம் இன்னும் 10 வருடங்களாவது பார்த்துக்கொண்டிருக்க வேண்டி வரும். எனவே 2026இல் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றில் இந்த சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படும்.

நாம் தொடர்ச்சியாக உங்களது பின்னூட்டங்கள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளை செவிமடுத்து, நெகிழ்வானதுமான இணக்கப்பாடுகளுடன் சாதகமான வகையில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்களைச் செய்வோம். ஆனால் எம்மிடம் இதற்கென ஒரு குறிக்கோள் உள்ளது.

எமது நாட்டிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்த கல்வியை வழங்க வேண்டுமென சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனவே நீங்கள் சீர்திருத்தச் செயற்பாட்டில் ஒரு தூணைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். இது ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கான முழுமையான ஒரு பெக்கேஜ் ஆகும்.

நிரல் அமைச்சின் பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என தரம்பிரித்து வைத்து இதனைச் செய்ய முடியாது. நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் நமது பிள்ளைகளாவர். எனவே, எம்மால் தரம் பிரித்து பணியாற்ற முடியாது. நாம் ஒன்றாக பணியாற்று வேண்டும். எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியில் நாம் ஒவ்வொருவருடனும் மிக நெருக்கமாக இடைத் தொடர்புகளை மேற்கொண்டு பணியாற்ற வேண்டிவரும். பிள்ளைகளுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

கல்விச் சீர்திருத்தம் பற்றிய கலந்துரையாடலை ஏற்படுத்துங்கள். நாம் இதுவரையில் ஆசிரிய சங்கங்களுடன், தொழிற்றுறையாளர்களுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எதிர்காலத்திலும் அதனைச் செய்வோம்.

பெற்றோர்கள் உள்ளிட்ட சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் இதில் இணைந்துகொள்ள வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், வட மகாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகிவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.