சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

சீர்திருத்தம் 2026 இல் நடைமுறைப்படுத்தப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே, அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும்.

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய முறைக்கு 50 நிமிட காலப்பகுதி என்று பார்த்திருக்க வேண்டாம்.

திசைகாட்டி அரசாங்கத்திற்கு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இல்லை.

– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

2026ஆம் ஆண்டில் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கு மாத்திரம் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்படுவதால் அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும், ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய கற்றல் செயற்பாட்டில் இருந்துகொண்டு 50 நிமிட காலப்பகுதி தொடர்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சபரகமுவ மாகாண கல்வி அதிகாரிகளைத் தெளிவூட்டும் வகையில் இன்று (26) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதமர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பின்வருமாறு தெரிவித்தார்.

தற்போதுள்ள கல்வி முறைமை நூற்றுக்கு நூறு விதம் தவறானது என்று நாம் கூறவில்லை. இந்தக் கல்வி முறைமையினுடாக திறமையானவர்கள் உருவாக்கப்பட்டார்கள். எனினும் வருடந்தோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இடைவிலகிச் சென்றார்கள். அவர்கள் தொடர்பில் யாரும் கரிசனை கொள்ளவில்லை. புதிய கல்விச் சீர்திருத்தமானது இதுவரையில் காணப்பட்ட பாடவிதான மேம்பாட்டுக்கு அப்பாற் சென்று ஒட்டுமொத்த கட்டமைப்பினையே மறுசீரமைக்கின்றது.

2026ஆம் ஆண்டில் இந்த முறைமை அறிமுகம் செய்யப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே. அதற்கான அடிப்படை முன்னுரிமை பெற்றுக் கொடுக்கப்படும். படிப்படியாக அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கல்விச் செயற்பாட்டினுள் இருக்கும் தீர்மானமிக்க காரணியாகத் திகழ்பவர் ஆசிரியரே. ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முறையான ஆசிரிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆசிரிய சமநிலையை உரிய முறையில் பேணுதல் வேண்டும்.

சபரகமுவ மாகாணத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை 10ஐ விடவும் குறைவாக உள்ள பாடசாலைகளும் உள்ளன. சில பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆகும். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்பொழுது அமைச்சில் இடம்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

2024ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது தெரியவந்த ஒரு விடயம், 20,000 பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இன்றும் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. அதேவேளை 80,000 மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு வருகை தருவதில்லை. இதுவும் பாரியதொரு பிரச்சினை ஆகும்.

தற்பொழுது கல்விக் கட்டமைப்பானது ஒரு சிலரின் அர்ப்பணிப்பின் மீதே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நபரின் தோளின் மீது கல்விக் கட்டமைப்பு செயற்பட முடியாது. ஒரு கட்டமைப்பாக வலுவான நிலையில் அது இயங்க வேண்டும்.

தற்பொழுது காலஅட்டவணையை 50 நிமிடங்கள் வரையில் நீடித்தமை தொடர்பில் இடம்பெறுகின்ற ஒரு கலந்துரையாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பிரதாய கற்றல் முறைமைகளில் இருந்து கொண்டு இந்த நேரத்தைப் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டாம். ஆசிரியர்கள் பேசுகின்ற பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருக்கின்ற முறைமையல்ல புதிய கல்விச் சீர்திருத்தத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. செயற்பாட்டு ரீதியில் பிள்ளைகளை பங்குகொள்ளச் செய்யும் ஒரு முறைமையாகும்.

மொடியுள் முறைமையை அறிமுகம் செய்வது திசைகாட்டி அரசு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காகவல்ல, அது இன்றைய உலகம் பயன்படுத்துகின்ற ஒரு முறைமையாகும்.

இதுவரை காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமது பெயரைப் பிரசாரம் செய்து கொள்வதற்காகவே கல்வியை பயன்படுத்தியுள்ளதாகவும், வாக்குகளைப் பெறும் குறிக்கோளுடன் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொண்டதன் காரணமாக கல்வியானது மேலும் குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைமை தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள்,

யாரோ ஒரு தரப்பினருடைய தேவையின் பொருட்டு நாம் கல்விச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் புத்திஜீவிகளின் அறிவினைப் பயன்படுத்தவில்லை எனவும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாம் அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். நாம் யாருடைய தேவைக்காகவும் அல்ல, தேசிய தேவைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். அவர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யும் தகவல்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கும் இடையில் எதுவிதமான தொடர்பும் இல்லை என்ற விடயத்தினை நாம் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த நிகழ்விற்கு சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்து உத்தியோகத்தர்களும் மாகாணத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப் பிரிவு