2026 ஆம் ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மற்றும் அதற்குரியதாக ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜூன் 16 ஆம் திகதி, மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமெனவும், 2028 ஆம் ஆண்டு தரம் 10 இற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும், 2029 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை புதிய பாடத்திட்டத்தின்படி நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மற்றும் தரம் 9 தொடக்கம் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் ஒவ்வொரு பிரிவின் தலைவர்களும் இக்கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான செயல்முறையை தங்கள் பிரிவுகள் மூலம் செயற்படுத்தும் விதம் மற்றும் அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சரைத் தெளிவுபடுத்தினர்.
இது பாடத்திட்டங்களைத் திருத்துதல், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குதல் மற்றும் இதற்காக பொதுமக்களின் பங்கேற்பு ஆகிய 5 தூண்களை (காரணிகளை) அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கல்விசார் மாற்றம் எனவும், இதன்போது உயர்ந்த மனப்பான்மை கொண்ட ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவகங்களின் பொறுப்பு என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் இச்சீர்திருத்தங்களுடன் மாத்திரம் நின்றுவிடாது இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேற்படி கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ அவர்கள், மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் திருமதி.மஞ்சுளா வித்தானபதிரன மற்றும் அந்நிறுவகத்தின் அனைத்துத் துறைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.









