
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
கலாநிதி ஹரிணி அமரசூரிய
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
சுயவிவரம் – கலாநிதி ஹரினி அமரசூரிய
கலாநிதி ஹரிணி அமரசூரிய 1970 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி இலங்கையின் கொழும்பில் பிறந்தார். அவரது பன்முக வாழ்க்கை இளைஞர்கள் பிரச்சினைகள், மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளிலான கவனத்துடன் கல்வி, சமூக செயற்பாடு மற்றும் அரசியல் துறை என விரிந்ததாகும். அவர் தற்போது இலங்கையின் முக்கிய கற்றறிவாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதியாக நாட்டுக்கு சேவையாற்றி வருகிறார்.
கடந்த ஒரு தசாப்த காலமாக, கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றினார். அவரது கற்பித்தல் பொறுப்புகள் மற்றும் சமூகவியல் பாடவிதான திருத்தம் ஆகியவற்றுடன், அவர் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத் தலைமைப் பாத்திரங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வந்ததுடன், 2016 முதல் பாலின சமத்துவம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலையியற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். திறந்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும் (2012 மற்றும் 2013) உதவிச் செயலாளராகவும் (2014 மற்றும் 2015) மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும் (2016) அவர் இருந்துள்ளதுடன், இதன்போது தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான அதிக ஒதுக்கீடுகளுக்காக அவர் குரல் கொடுத்தார்.
ஒரு ஆராய்ச்சியாளராக, கலாநிதி ஹரிணி அமரசூரிய மேல்தட்டு அரசியல், கருத்து வேறுபாடு, சமூக நீதி, பாகுபாடு மற்றும் இளைஞர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சிறுவர் தொழில், நிறுவனமயமாக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு, இளவயது திருமணம், நல்வாழ்வு, கல்வி ஆராய்ச்சி மற்றும் புலமைச் சொத்து பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். 2014 இல், கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கைக்கான தேசிய மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதம ஆசிரியராக இருந்தார் மேலும் அந்த ஆண்டு இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கையை வரைவதிலும் அவர் பங்குபற்றினார். 2016 இல், அவர் இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான மக்கள் பிரதிநிதி குழுவின் (PRC) உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு பிஷப் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியைப் பெற்று பல வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். அவர் டில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளமானி பட்டமும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மெக்வரி பல்கலைக்கழகத்தில் பிரயோக மானுடவியல் மற்றும் அபிவிருத்தி கற்கைகளில் முதுமானி பட்டமும் பெற்றுள்ளார். தனது பட்டப்படிப்பிற்காக, பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். 2011 இல், அவர் இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தனது கலாநிதி கற்கைக்கான ஆய்வறிக்கையை எழுதி எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் மற்றும் சர்வதேச சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் கலாநிதி பட்டம் பெற்றார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் சமூக சுகாதார அமைப்பான NEST , இலங்கையில் பெண்கள் மற்றும் பாலின பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பான பெண்கள் ஆராய்ச்சி நிலையம் (CENWOR) மற்றும் இலங்கையில் சட்ட ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பான சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் சபை உறுப்பினராக பல வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.