எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு தாம் தயார் எனவும், தமது பிள்ளைப் பருவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
இன்று (26), இரத்தினபுரி, சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை பார்வையிட்ட பிறகே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
“தற்போதைய பாடசாலைக் கல்விச் சீர்திருத்தம் மூலமாக உலகைக் காணும் பிள்ளைகள் எதிர்காலத்தில் புவியியல் சார்ந்த சவால்களை வெற்றிகொள்ளத் தயாரா?” எனும் தலைப்பின் கீழ் மாணவர் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெற்றதன் பின்னர் பிரதமரின் கரங்களால் பிள்ளைகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
அதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக பெரியவர்களை விடவும் கூடிய தெளிவினை மாணவர் பாராளுமன்றப் பிள்ளைகள் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் மிகச் சிறப்பாக பகுப்பாய்வு செய்திருந்தனர். அதிலுள்ள நன்மை-தீமைகள், சவால்கள் தொடர்பில் மாணவர் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பான வகையில் நீங்கள் விடயங்களை முன்வைத்தீர்கள். உண்மையில் நான் ஒரு விடயத்தை முன்மொழிகிறேன். நீங்களும் இதைப் பற்றி பேசுங்கள், இந்த கல்விச் சீர்திருத்தம் என்பது அமைச்சிலுள்ள உத்தியோகத்தர்கள் அல்லது அமைச்சர்கள் மாத்திரம் இணைந்து தயாரிக்கும் ஒன்றாக இருக்க முடியாது. இக்கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலினூடாக நாம் இணைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கு நேரடியாக இளம் சந்ததியினர், மாணவ மாணவிகள் இணைந்து கொள்ள வேண்டும். எனவே நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் விசேட பாராளுமன்ற அமர்வொன்றினை நடத்தியேனும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக உங்களது வயதினைச் சார்ந்த ஏனைய மாணவ மாணவிகளிடம் கருத்துக்களைப் பெற்று எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
எனக்கு பாடசாலை மாணவியொருவர் சூழல் நேயமிக்க கருத்திட்ட முன்மொழிவொன்றினை ஒப்படைத்தார். அந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.
மாணவர் பாராளுமன்றத்தின் இன்றைய விவாதத்தில் அமைச்சர் ஒருவர் ஆற்றிய உரை என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான் பிள்ளைப் பருவத்தினரின் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசுகின்ற பெரியவர்கள் எமது பிள்ளைப் பருவத்தை அழித்து விடுகின்றனர் எனத் தெரிவித்தார். நான் இன்று ஒரு தீர்மானத்தை எடுத்தேன், இனிமேல் எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி நான் பிள்ளைகளுடன் கதைப்பதில்லை, அதற்குப் பதிலாக இந்நாட்டின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
அதேபோல் நீங்கள் அனைவரும் மாணவர் பாராளுமன்ற அமர்வினை முகாமைத்துவம் செய்த விதம், அதேவேளை உரையாற்றி விதம் என்பவற்றைப் பார்க்கின்ற போது, அவற்றைக் கேட்கின்ற போது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் தோன்றியது. எதிர்கால நாட்டைப் பற்றிய ஒரு நம்பிக்கை எழுந்தது. எதிர்கால சந்ததியினர் முன்னேற்றகரமானவர்கள், எதிர்கால சந்ததியினர் மிகவும் திறமையானவர்கள் என்று.
அதிபர் உள்ளிட்ட ஆசிரிய குழாத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் இத்தகையதொரு பிள்ளைச் சமூகத்தை உருவாக்கியமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பத்மகுமார, சுனில் ராஜபக்ஷ, வைத்தியர் ஜனக, மாகாண கல்விப் பணிப்பாளர், மாவட்டத்தின் கல்வி அதிகாரிகள், சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் தம்மிக வத்துகாரவத்த உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஊடகப் பிரிவு













