கல்வி அமைச்சினால் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் மாகாண மற்றும் தேசிய மட்ட விருது வழங்கும் விழா இன்று (20) கல்வி அமைச்சில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
தேசிய ஒலிம்பியாட் போட்டித்தொடரானது அறிவியல், கணிதம், தகவலியல் மற்றும் புள்ளிவிபரவியல் ஆகிய பாடங்களை மையமாகக் கொண்டு பல பிரிவுகளூடாக நடாத்தப்படுகிறது. இந்தப் பாடங்களில் திறமைகளையுடைய மாணவர்களை அடையாளம் காணல், ஊக்குவித்தல் மற்றும் பாடவிதானம் சார்ந்த விழிப்புணர்வை அதிகரித்தல் அத்துடன் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்கும் தேசிய அணியைத் தெரிவுசெய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் மாகாண மற்றும் அகில இலங்கைப் போட்டிகளில் வெற்றியீட்டிய 101 மாணவர்களுக்கு திறமைச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கல் இதன்போது இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன அவர்கள், இத்துடன் உங்களது பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் உலகை எவ்வாறு வெல்வது என்பதனைத் திட்டமிடுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விருதுகளை வென்ற மாணவர்கள், அறிவியல் ஒலிம்பியாட் சர்வதேச போட்டித்தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.








