அறிவை மாத்திரம் முன்னேற்றும் கல்வி முறைமைக்குப் பதிலாக இதயத்தாலும் வளர்ச்சியடைந்த அனுதாப மனப்பாங்குடைய போதிசத்துவ குணாம்சங்களைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்கு புதிய கல்விச் சீர்திருத்தம் மூலமாக கரிசனை கொள்ளுமாறு அஸ்கிரி, மல்வத்து மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் வேண்டுகோள் விடுத்தனர்
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பைச் சேர்ந்த மகா சங்கத்தினர் மற்றும் சங்கசபை அங்கத்தவ மகாசங்கத்தினரை தெளிவூட்டும் முகமாக கண்டி தலதா மாளிகை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மகா சங்கத்தினர் இதனைத் தெரிவித்தனர்.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் தொடர்பிலும் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் நிலவும் நிலைமைகள் மற்றும் அதன் உண்மைத் தன்மை தொடர்பாகவும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு நாலக்க களுவெவ ஆகியோரால் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பைச் சேர்ந்த மகா சங்கத்தினரைத் தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது உபதேசமளித்த அஸ்கிரி, மல்வத்து மகா சங்கத்தினர் புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டினுள் நன்னெறிக் கல்வியை கற்பித்தல் முக்கியம் எனவும், தொழிற்றுறை ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும் பிள்ளைகளிடத்தில் முன்னேற்றப்பட வேண்டிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டினர்.
புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டுக்கு இணையாக பிரிவெனாக் கல்வியினுள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே ஸ்ரீ உபாலி நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர், பிரதான சங்கசபையின் அங்கத்தவ மகாசங்கத்தினர், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
ஊடக அலகு.