– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
பல்கலைக்கழகங்களுக்கு உள்நுழையும் பிள்ளைகளின் பாதுகாப்பு, நலனோம்புகை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் கற்றல் வசதிகள் தொடர்பில் பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இன்று (03) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் விடுதி வசதிகள், நீர், மின்சாரம் உள்ளிட்ட நலனோம்புகை வசதிகள் தொடர்பில் இங்கு பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதோடு, இதுவரையில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்காத மாணவர்களின் குடிநீர்ப்பிரச்சினையை ஒரு மாத காலப்பகுதிக்குள் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக் குழு தொடர்ச்சியான மேற்பார்வையை இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய,
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு வருடத்திற்கு 40,000 மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். அப்பிள்ளைகளுக்கான பாதுகாப்பு, நலனோம்புகை மற்றும் கற்றல் வசதிகளை உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற்கு பல்கலைக்கழங்கள் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும்.
சம்பிரதாய முறையிலான பட்டத்தைப் பெற்று பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுகின்ற பிள்ளைக்கு எதிர்கால வாழ்க்கை பற்றிய நம்பிக்கை ஏற்பட வேண்டும். அத்துடன் பல்கலைக்கழகங்களை பண்புத்தரம் கொண்ட பட்டப்பின் பட்டத்தை வழங்கும் ஆராய்ச்சி நிறுவனமாக முன்னேற்றுவது மிக அவசியம்.
பல்கலைக்கழங்களில் பிள்ளைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், பாலியல் சேட்டைகள், குற்றங்கள், அழுத்தங்கள் என்பவற்றைப் போன்று வன்முறைகளும் உடனே நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் எடுக்கக் கூடிய உச்சகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் தயார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுக்கத்துடன் தமக்கு கிடைக்கின்ற சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். எனினும் அவர்களது சுதந்திரத்தை அவசியமற்ற வகையில் வரையறுப்பதும் பொருத்தமானதல்ல.
எமது பல்கலைக்கழக கட்டமைப்பில் பீடங்களினது ஏனைய வசதிகள் பல்வேறு வகையில் மேம்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். எனினும், பிள்ளைகளுக்கு தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரியதாக பீடங்களின் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் பரஸ்பர ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் செயற்படுவதில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா உள்ளிட்ட பீடாதிபதிகள், கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு










