கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற தொழிற்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்குவதற்காக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் “உழைப்புச் செயற்பாட்டுத்” திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன், தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் 311 தொழில் பயிற்சி நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜூலை 4 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அவர்களின் தலைமையில் இன்று (17) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற அதேவேளை, அதில் சுமார் 240,000 மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்கின்றனர். இந்த மாணவர்களுள் சுமார் 125,000 பேர் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நுழைகின்ற அதவேளை சுமார் 50,000 மாணவர்கள் வேறு இணைந்த உயர்கல்வி நிறுவனங்களை அனுகுகின்றனர்.
அதன்படி, ஆண்டுதோறும் பல்கலைக்கழக அனுமதியை இழக்கும் சுமார் 175,000 மாணவர்களை தொழிற்கல்வியைத் தொடர்வதற்காக ஊக்குவிப்பதற்கும், அவர்களின் கல்விக்கேற்ற சூழல் மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகமும் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இந்தத் செயற்றிட்டத்திற்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி கற்கும் 125,000 மாணவர்கள், சுமார் 10,000 கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட சுமார் 160,000 பேர் இணைந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு, ஜனாதிபதி மேலதிக செயலாளர் எஸ்.பி.சீ. சுகீஸ்வர ஆகியோர் உட்பட, கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் உத்தியோகத்தர்களும், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






