– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி
ஹரினி அமரசூரிய-
பாடசாலைகள் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளைச் சரியாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் மேற்கொள்வதற்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் விசாரணை அலகிற்கு அவசியமான உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை முழுமைப்படுத்தி வலுப்படுத்துமாறும், நிலவும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் ஒன்றில் நேற்று (06) இடம்பெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தவிசாளராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் சார்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தின் இரண்டாவது கூட்டம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அதன்போது கல்விச் சீரமைப்பு தொடர்பான ஆசிரிய பயிற்சி மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், தற்காலிக கட்டிடங்களில் நடாத்திச் செல்லப்படும் பாடசாலைகளை நிரந்தர இடங்களில் தாபித்தல், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு தொழிற்றுறைக் கல்வி அணுகலை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பல்கலைக்கழக அணுகலைப் பெற்றுக் கொடுத்தல், ஆசிரிய, அதிபர் மற்றும் ஆசிரிய கல்விச் சேவையின் நியமனங்கள் மற்றும் இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கும் போது மனிதாபிமான தேவைப்பாடுகள் தொடர்பிலும் அத்துடன் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும், இடமாற்றங்கள் மற்றும் இணைப்புச் செயற்பாடுகளின் போது கல்விக் கட்டமைப்பில் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் அவற்றை மேற்கொள்வது அவசியமெனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். கல்வித் துறையுடன் தொடர்புடையதாக கிடைக்கின்ற முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சின் விசாரணைப் பிரிவில் நிலவும் வெற்றிடங்களை பூரணப்படுத்தி துரிதமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடியதாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் விடயப் பொறுப்பு அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கல்விச் சீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது உரிய குழுக்களின் தவிசாளர்கள் விடயங்களை முன்வைத்தனர்.
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு













