எமது நாட்டின் எதிர்கால இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்வதற்கு தனியார் துறை மற்றும் அரச துறையின் ஒன்றிணைவு மற்றும் ஒத்துழைப்பு இன்றியமையாத விடயம் உள்ளதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கென ரூபா 6.8 மில்லியன் பெறுமதியுடைய1.5 மில்லியன் முகக் கவங்களை கையளிக்கும் நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“இது போன்ற இடர் நிறைந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான பணிக்கு பங்களிப்பு நல்கியமை தொடர்பில் எமது நன்றிகளை அவர்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம், ஒட்டு மொத்த பிள்ளைகள் சார்பாக. அதேவேளை பிரண்டிக்ஸ் நிறுவனம் அரசுடன் கைகோர்த்து நாட்டில் “நீர் மற்றும் கல்வி” ஆகிய இரு பிரிவுகளின் அபிவிருத்தியின் பொருட்டு தமது பங்களிப்பினை வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் நாம் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம். இந்த செயற்பாடானது ஏனைய நிறுவனங்களுக்கும் முன்மாதிரியான செயற்பாடாகும். எமது நாட்டின் எதிர்காலமாகிய பிள்ளைகளுக்காக தமது பங்களிப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வது எம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். இதன் பயனாளிகளாக இருப்போர் இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமிய பாடசாலை மாணவர்களே என்பது இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.” எனவும் தெரிவித்தார். இந்த முகக் கவசங்கள் நாட்டிலுள்ள 5,824 பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேற்படி நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ.கே. பெரேரா, ஊடக செயலாளர் புத்திக்க விக்கிரமாதர, பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி அனூஷா அலஸ் உட்பட பலரும் பங்குபற்றினர்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்