பாடசாலை மாணவர்களது ஆங்கில அறிவுத் திறனை அதிகரிக்கும் குறிக்கோளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக உருவாக்கப்பட்ட ஆங்கில திறன் வகுப்பு கருத்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் காலி மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா, கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக்க விக்கிரமாதர, பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் (கிழக்கு) செந்தில் ஈஸ்வரன், லோரன்ஸ் வின்சன்ட் ஆகியோர் உட்பட மேலும் பலர் பங்குபற்றியிருந்தனர். கடந்த வருடம் தொடக்கம் நாடு தழுவிய வகையில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு திறன் வகுப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்வி அமைச்சுடன் இணைந்ததாக ஒருங்கிணைப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டமானது பிரண்டிக்ஸ் நிறுவனத்தின்அனுசரணையில் மேற்கொள்ளப்படும் ஒரு கருத்திட்டமாகும். பாடசாலைகளில் தரம் 03 தொடக்கம் தரம் 08 வரையிலான பாடவிதான விடயப்பரப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடங்களை உள்ளடக்கியதாக Read to me என்ற பெயரிலான இணையதள உள்ளீடாக இந்த ஆங்கில திறன் வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டின் சகல பாடசாலைகளிலும் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு Right to Read நிறுவனம் எதிர்பார்க்கின்றது.